நிலையில்லாத நியாயங்கள்..!
கே.எஸ்.ராதாகிருஷ்ணன்
தத்துவவாதிகள் உலகத்தைப் பல்வேறு வழிகளில் வியாக்கியானப்படுத்தி (interpreted) மட்டுமே உள்ளனர்; ஆனாலும், விஷயம் என்னவோ அதை மாற்றி (change)அமைப்பதாகும். துயரம் என்பது ஒரு அதிர்ச்சியின் விளைவாகும், அமைதியாக இருக்கும், வாழ்வின் வழக்கமான செயல்முறையை ஏற்றுக்கொண்டு இருக்கும் ஒரு மனதை, தற்காலிகமாக சற்று அசைத்துப் பார்ப்பதாகும்.
அரசியலாகட்டும் அல்லது ஒரு தொழிலாக இருக்கட்டும். அதில் அனுபவப்பட்டுப் படிப்படியாக முன்னேறி வந்து அதை ஆளுமை செய்வதோடு மக்கள் மத்தியில் தங்கள் செயலுக்கு (ஓட்டுக்கு பணம், போராட்டம், கூட்டம் என பணம் கொடுத்து கூட்டுவது போன்று இல்லாமல்) நன்மதிப்பை பெறுவது தான் உண்மையான வளர்ச்சி போக்கு.
•••
ஏதாவது நிகழ்கிறது – பொது வாழ்வில் செயல்பாட்டு தடைகள், நன்றியற்ற பார்வைகள்,வேலை இழப்பு என பல போற்றப்பட்ட ஒரு நம்பிக்கையைப் பற்றிக் கேள்வி எழுப்புதல் – ஆகையால் மன அமைதிக் குலைக்கப்படுகிறது.
ஆனால் அமைதி குலைக்கப்பட்ட மனம் என்ன செய்கிறது? அது மீண்டும் தொந்தரவுக்கு உட்படாமல் இருக்க ஒரு வழியைக் கண்டுபிடிக்கிறது.
அது மற்றொரு நம்பிக்கையில், அதிப் பாதுகாப்பான வேலையில், ஒரு புதிய உறவில் அடைக்கலம் அடைகிறது.
மீண்டும் வாழ்க்கையின் அலை கூடவே வருகிறது, அதன் பாதுகாப்புகளை உடைக்கிறது.
ஆனால் மனம் உடனே அதைவிட வேறொன்றில் பாதுகாப்பைக் காண்கிறது. மேலும் அப்படியே அச்செயல்முறை நடந்துகொண்டு இருக்கிறது.
இது நுண்ணறிவின் செயல்முறை கிடையாது, இல்லையா?அப்படி என்றால் நுண்ணறிவின் செயல்முறை என்ன?
நீங்கள் ஏன் மற்றொருவரைக் கேட்கிறீர்கள்?
நீங்களாகவேக் கண்டறிய உங்களுக்கு விருப்பம் இல்லையா?
நான் உங்களுக்கு ஒரு விடையைத் தருவேன் என்றால், நீங்கள் ஒன்று அதை மறுப்பீர்கள் அல்லது அதை ஏற்பீர்கள், அது மீண்டும் நுண்ணறிவை, புரிந்து கொள்ளலைக் கெடுக்கிறது.
” நீங்கள் துயரம் பற்றிக் கூறியிருப்பது துல்லியமான உண்மை எனக் காண்கிறேன். அதைத்தான் நாம் எல்லோரும் செய்கிறோம்.
ஆனால் ஒருவர் இந்தப் பொறியிலிருந்து வெளியே வருவது எவ்வாறு?
மனதின் உட்புறமாகவோ அல்லது வெளிப்புறமாகவோ விதிக்கப்படும் கட்டாயப்படுத்தலின் எந்த வடிவமும் உதவாது, உதவுமா?
அனைத்து கட்டாயப்படுத்தலும், எவ்வளவு நுட்பமானதாக இருப்பினும், அறியாமையின் விளைவே ஆகும்.
அது ஒரு பலனைப் பெறும் ஆசையினாலோ அல்லது தண்டிக்கப்படுவோமோ என்ற பயத்தினாலோ தோன்றுவதாகும்.
அந்தப் பொறியின் முழு இயல்பையும் புரிந்துகொள்வதே அதிலிருந்து விடுபடுவதாகும்.
எந்த மனிதனாலும், எந்த அமைப்பாலும், எந்த நம்பிக்கையாலும் உங்களை விடுவிக்க முடியாது.
இதன் உண்மை மட்டுமே விடுவிக்கும் காரணி ஆகும் – ஆனால் நீங்கள் சுயமாக இதைக் காணவேண்டும், வெறுமனே பிறரால் அறிவுறுத்தப்படக் கூடாது.
நீங்கள் தான் அந்த பயணிக்கப்படாத கடலில் பயணம் மேற்கொள்ள வேண்டும். சமூக மெய் நிலையில் நிகழ்ந்து கொண்டு இருக்கும் அரசியலுக்கும் தொடர்பு இருக்காது. சமூகம் தனக்கான பாதையில் சென்று கொண்டேயிருக்கும். பதிலாக அங்கேயிருந்து தனக்கு என்ன தேவையோ அதை மட்டும் தேவைப்படும் சமயத்தில் எடுத்துக் கொள்ளும். இன்றைய வியாபார அரசியல் என்பது அந்தந்த நேரத்து நியாயங்கள். அவ்வளதான்… மனிதர்கள் வாழ்வு, சமூகம் நதிநீர் போல ஓடிக்கொண்டிருக்கும்.