கோவையில் நாளை மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 3 ஆயிரம் பேர் தி.மு.க.வில் இணைகிறார்கள்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.
இதற்காக அவர் நாளை (சனிக்கிழமை) 11ம் தேதி காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோவை விமான நிலையத்திற்கு வருகிறார்.
விமான நிலையத்தில் அவருக்கு ஏராளமான தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.
வரவேற்பை ஏற்றுக்கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பின்னர் காரில் சின்னியம்பாளையத்தில் உள்ள தனியார் மகாலுக்கு செல்கிறார்.
அங்கு மாற்றுக்கட்சியினர் 3 ஆயிரம் பேர் தி.மு.க.வில் இணையும் விழா நடக்கிறது.
இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மாற்று கட்சியை சேர்ந்த 3 ஆயிரம் பேர் தங்களை தி.மு.க.வில் இணைத்து கொள்கின்றனர்.
அவர்களை முதலமைச்சர் வரவேற்று பேசுகிறார்.
இந்த நிகழ்ச்சி முடிந்ததும், காரில் அவர் ரேஸ்கோர்சில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு வருகிறார். அங்கு மதிய உணவு சாப்பிட்டு விட்டு சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார்.
பின்னர் மாலை 5 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரேஸ்கோர்ஸ் விருந்தினர் மாளிகையில் இருந்து கார் மூலமாக கருமத்தம்பட்டிக்கு செல்கிறார்.
கருமத்தம்பட்டியில் விசைத்தறி, கைத்தறியாளர்கள் சங்கம் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடக்கிறது.
விழா முடிந்ததும், கோவை நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு அன்று இரவு 8 மணிக்கு கோவை விமான நிலையம் வந்து, விமானம் மூலம் மீண்டும் சென்னை புறப்பட்டு செல்கிறார்.
முதலமைச்சர் வருகையை முன்னிட்டு அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்க தி.மு.க.வினர் தயாராகி வருகிறார்கள்.
விழா நடைபெறும் இடத்தில் தற்போது பந்தல் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
முதலமைச்சர் வருகையையொட்டி கோவை மாவட்டத்தில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.