எண்ணைய் என்ன செய்துவிடும் என அலட்சியம் செய்யாதீங்க
நீங்கள் வெளியில் சாப்பிடும் நபரா? பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் சுட வைத்து சாப்பிட்டால் உண்டாகும் அபாயம்-
நீங்கள் அடிக்கடி வெளியில் சாப்பிடும் நபரா?பயன்படுத்தப்பட்ட எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தியோ,மீண்டும் சுட வைத்து சாப்பிடும் நபர் என்றால்,அதனால் ஏற்படும் பாதிப்புகளை தெரிந்து கொள்வது நல்லது.
பயன்படுத்தப்பட்ட எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தும் போது ஏற்படும் சுகாதார சீர்கேடுகளைத் தடுக்க உரிய கண்காணிப்பு அமைப்புகள் தமிழ்நாட்டில்/இந்தியாவில் உள்ளதா?என்றால் இன்னமும் “இல்லை”என்பதே பதிலாக உள்ளது.
பயன்படுத்திய எணணெய்யை சுட வைத்து மீண்டும் பயன்படுத்தினால்,வேறுபட்ட கொழுப்புகள்(Transfats)அதிகமாகி,அவை இரத்தக்குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தி இருதய நோய்களை ஏற்படுத்துகின்றன.ஆக பயன்படுத்தப்பட்ட எண்ணெய்களை முடிந்த அளவிற்கு திரும்ப பயன்படுத்தாமலோ,அல்லது மீண்டும் சூடுபடுத்துவதற்கு பதில் இட்லிபொடி,பிற பொடிகளில் பயன்படுத்துவது நல்லது. இது வீடுகளில் சாத்தியம்.
ஆனால்
வெளியில்,கடைகளில் பயன்படுத்தப்பட்ட எண்ணெய்யை யே மீண்டும் சுட வைத்து திரும்ப பயன்படுத்துவதால்,குறிப்பாக வறுவல் (Frying)வகைகளில் மாறுபட்ட கொழுப்புகள் அதிகமாகி,இருதய நோய்,சர்க்கரைநோய்(வகை-2),செல் சவ்வுகளில் பாதிப்பு போன்றவை ஏற்படுவதுடன், நல்ல கொழுப்பை(HDL-cholesterol)குறைத்து,கெட்ட கொழுப்பை(LDL-cholesterol,Triglycerides)அதிகமாக்கி,இரத்தக்குழாய்காளில் அடைப்பை ஏற்படுத்தி இருதய நோய்களை ஏற்படுத்தி பாதிப்புகளை,அவை உருவாக்குகின்றன.
எண்ணெய்களில் பல விதம் உள்ளன. குறைந்த வெப்பத்திலேயே புகையை ஏற்படுத்தும் எண்ணெய்கள்(Low smoking point) பொதுவாக உடம்பிற்கு நல்லது. உ.ம்.தேங்காய்,ஆலிவ் எண்ணெய்… போன்றவை.
பயன்படுத்தப்பட்ட எண்ணெய்யை எதுவரை பயன்படுத்தலாம் எனும் பாதுகாப்பான அளவை தற்போது தான் அறிஞர்கள் கண்டுபிடித்து சொல்லியுள்ளனர். அது-மொத்த முனைநிலை பொருளின்((Total Polar Material)அளவு என்பதே. அது 24-25க்கு கீழே இருந்தால் அது பாதுகாப்பான அளவு.
பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் சுட வைக்கும் போது-
1)அதன் சத்து குறைகிறது.
2)முனைநிலை பொருள் உருவாகிறது.
3)வேதிமாற்றங்கள் நிகழ்ந்து புதுவகையான பொருட்கள்(Neo-Formed Compounds-NFC)உருவாகிறது.
வேறுபட்ட கொழுப்புகளும்(Transfats) உருவாகி தற்சமயம் தினசரி உணவில் 5% இருக்கலாம் என்பது 2022ல்,புதிய ஆய்வு தரவுகளின் படி 2% ஆக இருக்க வேண்டும் என இந்தியாவில் குறைக்கப்பட்டுள்ளது.
இதில் வேதனை என்னவெனில்,இந்தியாவின் உணவு பாதுகாப்பு,தர நிர்ணயக்குழுவின்(FSSAI) வழிகாட்டுதல் நெறிமுறைகளில் மொத்த முனைநிலை பொருளின் உட்சபட்ச அளவு குறித்து எந்த தகவலும் இல்லை என்பதே.
அதை கண்டறிந்து நடைமுறைக்கு கொண்டுவர FSSSI பெரிதாக முயற்சிகள் மேற்கொள்ளவில்லை.
TPM அளவு,பயன்படுத்தப்பட்ட எண்ணெய்யை மீண்டும் பாதுகாப்பாக பயன்படுத்த முடியுமா என்றும்,எந்த அளவிற்கு எண்ணெய் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது என்றும் கண்டறிய உதவும் என்பதால், அதை அளப்பது மிக முக்கியம். அளக்கும் கருவியின் விலை-ரூ.45,000 மட்டுமே.
உணவகங்கள்,உணவு விடுதிகள்,சிறு கடைகள் இவற்றில் TPM அளவை கண்டறிந்து(25 க்கு கீழே இருந்தால் உட்கொள்ள உகந்தது),அதை பாதுகாப்பான அளவில் பயன்படுத்த புது விதிகளை அரசு உருவாக்குவது சிறப்பாக இருக்கும்.
மொத்த முனைநிலை பொருட்கள் அதிகமாக இருந்தால் சுகாதார சீர்கேடுகள் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளதால்,உணவில்,எண்ணெய்யில் அவை எவ்வளவு இருக்க வேண்டும் எனத் தெளிவாக FSSAI விதிமுறைகளை உருவாக்கி நடைமுறைப் படுத்துவதுடன்,மக்களுக்கு இது குறித்து போதுமான விழிப்புணர்வையும் ஏற்படுத்தி,வீட்டிலும்/வெளியிலும் எண்ணெய்யில் உள்ள TPM அளவை பாதுகாப்பான அளவில் வைப்பதுடன்,கடைகளில் அதன் அளவை வெளிப்படைத் தன்மையுடன் வெளியிடுவதை உறுதிபடுத்தினால்,அதனால் எற்படும் பாதிப்புகளை குறைக்க ஏதுவாக இருக்கும் என்ற உண்மையை உணர்ந்து,
அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுவது சிறப்பாக இருக்கும்.
மரு.வீ.புகழேந்தி.