நடிகை ஸ்ரீவித்யா அவர்களின் நினைவுநாள்.

0 139


என்னை பொறுத்தவரையில் அவரை நான் நினைவு கொள்ளத்தான் வேண்டும் அவருக்கு நான் வழக்கறிஞராக இருந்து உதவி செய்துள்ளேன். அவருக்கு ஏற்பட்ட சொத்து வழக்குகள் சார்ந்த பல நெருக்கடிகளின் போது அவருக்கு ஆலோசனை சொல்வேன். மூத்த வழக்கறிஞர் பிச்சை, மயிலாப்பூர்
வழக்கை நடத்தினார்.அந்த நேரத்தில் அவர் நடிகை தேவிகா அவர்களையும் கூட எனக்கு அறிமுகப்படித்தி அவருடைய வீட்டு மனையை வாங்க ஶ்ரீ வித்யா பேசி உதவினார். பினபு தம்பு என்று தான் தேவிகா என்னை அழைப்பார். இந்த இருவர்கள் கை உபசரிப்பில் நளபாகமாக சாப்பிட்டது. இவர்களோடு அரட்டை என நினைவுகள்.

அபூர்வ ராகங்கள்‘அதிசய ராகம்’ என்றொரு பாடல். அதில்,

“தேவர்கள் வளர்த்திடும்
காவிய யாகம்
அந்த தேவதை கிடைத்தால்
அது என் யோகம்…”

என்ற வரிகளை எழுதியிருப்பார் கவியரசர் கண்ணதாசன். அவர் என்ன நினைத்து எழுதினாரோ தெரியாது. ஆனால் அப்பாடலில் நடித்த ஸ்ரீவித்யாவுக்கு கவிஞரின் வரிகள் கச்சிதமாக பொருந்தும்.

கதாநாயகி, குணச்சித்திர நடிகை என 40 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் வெற்றிகரமாக வலம்வந்த ஸ்ரீவித்யாவின் 17வது ஆண்டு நினைவு தினம், இன்று.

பிரபல கர்நாடக இசைப்பாடகி எம்.எல்.வசந்தகுமாரி – நடிகர் கிருஷ்ணமூர்த்தி தம்பதியின் மகளான ஸ்ரீவித்யா சிறு வயதிலேயே நடனமும் சங்கீதமும் கற்றுக்கொண்டவர். நாட்டியப்பேரொளி பத்மினியின் குழுவில் இணைந்து பணிபுரிந்தவர். இசைக் கச்சேரிகளுக்காக தாய் அடிக்கடி வெளியூர் சென்றுவிட, கலைதான் ஸ்ரீவித்யாவுக்கு தாயின் அன்பை முழுமையாக தந்திருந்தது. பின்னாளில் அதுவே அவரது வாழ்க்கையாகவும் மாறிப்போனது.

1967ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் நடித்த திருவருட்செல்வர் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் ஸ்ரீவித்யா. தொடர்ந்து மலையாளம் மற்றும் தெலுங்கு திரையுலகிலும் கால்பதித்தார். அவர் கதாநாயகியாக நடித்த முதல் திரைப்படம், ‘டெல்லி டூ மெட்ராஸ்’. 1970-களில் கே.பாலச்சந்தர் இயக்கிய நூற்றுக்குநூறு, வெள்ளி விழா, சொல்லத்தான் நினைக்கிறேன், அபூர்வ ராகங்கள் போன்ற படங்களில் நடித்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் முதல் கதாநாயகி ஸ்ரீவித்யாதான். பின்னாள்களில் ரஜினியின் அம்மாவாக, மாமியாராகவெல்லாம் கூட நடித்தார். அக்காலத்தில் தமிழைப் போலவே மலையாளத்திலும் பல்வேறு திரைப்படங்களில் பணியாற்றினார். அங்கு அவருக்கு சிறந்த கதாபாத்திரங்கள் வழங்கப்பட்டன. அதன்மூலம் கேரளாவின் மகளாகவே மாறிப்போனார்.

ஒருமுறை ஸ்ரீவித்யா அவர்களை நெல்லை மாவட்டத்தில் பிறந்த உயர் காவல்த்துறை அதிகாரி ஒருவர் பலவறாக தொந்தரவு கொடுத்து வந்தார்.அதில் நான் தலையிட்டு 1987 இல் கவர்னர் சுந்தர் லால் குரானா விடம் சொல்லி,அந்த மிரட்டலில் இருந்து வித்யா அவர்களைப் பாதுகாத்து வெளிவர உதவி செய்தேன்.

மிகச் சிறந்த நடிகையாய் திரைத் துறையில் பரிணமித்து ரசிகர்களின் கவனத்தை பலவாறாகத் தன் நடிப்பில்
ஈர்த்தவரும் எளிமையான குணத்தோடு பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மையும் கொண்டவர் ஸ்ரீ வித்யா. அவரது குடும்ப வாழ்வில் பல இன்னல்கள், முழுக்க மிக துன்பகரமான வாழ்க்கையை வாழ நேர்ந்தவர் என்கிற முறையில் எனக்கு அவர் மேல் ஒரு அக்கறை இருந்தது. ஸ்ரீவித்யா சிறுவயதில் தனிமையைப் போக்க ஸ்ரீவித்யாவுக்கு உதவிய கலை அவரின் மணமுறிவின் போதும் கைகொடுத்து அவரை நகர்த்தியது. தனிப்பட்ட வாழ்வில் உள்ள சோகங்களை ஓரமாக வைத்துவிட்டு, தனது தொழிலான நடிப்பதில் தொடர்ந்து கவனம் செலுத்தினார் அவர். வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் நடித்தார். நல்ல குரல்வளம் கொண்டவர் என்பதால் சில பாடல்களையும் பாடினார் அவர்.
ஜோசப் என்ற மனிதரோடு அவர் வாழ்ந்த வாழ்க்கையில் நிகழ்ந்த பல விஷயங்கள் மறைக்கப்பட்டு விட்டு தான் போய்விட்டன. கனவு கன்னிகளின் வாழ்க்கை இப்படித்தான் மறைந்து போய் விடுகிறது.

திறமையும் அழகும் அறிவும் நடிப்பும் எல்லாம் இருந்தும் இந்த திரை துறையில் சிலரின் வாழ்வு சொல்ல முடியாத துயரங்களை அனுபவித்து வந்திருக்கிறது என்று நினைக்கும் போது அவர் மீது இருந்த பரிவு சற்றே துக்கமாகி அவர் இறந்த இந்த நாளை மீண்டும் நினைவிற்கு கொண்டு வந்து விட்டது.

திருவனந்தபுரம் அவர் இறுதி காலத்தில் இருந்த போது நேரில் சென்று போய் பார்த்துவிட்டு வந்தேன்.

ஒரு இயல்பான பெண்ணின் வசந்தம் ஓய்ந்த நினைவுகள்! பாடகி எம் எல் வசந்தகுமாரி அவர்களது அருமை மகள் ! தன் இறுதி நாளில் முதுகெலும்பு புற்று நோயினால் மரணமடைந்தார்.! வெள்ளந்தி மனிஷி ஶ்ரீவித்யா… ப்ரியமான அன்புத் தோழியின் நினைவுகள் என்றும் நெஞ்சில்…

Leave A Reply

Your email address will not be published.