அரசியலில் நடிகர் விஜய்-வழக்கறிஞர்.கே.எஸ் இராதகிருஷ்ணன்
தமிழக அரசியலில் நடிகர் விஜய்….
எப்படி? எதை நோக்கி….
- வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன்.
——————————————————
எதிர்பார்த்தததோ எதிர்பாராததோ நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம் நிகழ்ந்து விட்டது.
வருகிற நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவும் பிறகு இரண்டரை ஆண்டுகளில் வரப்போகிற தமிழக சட்டமன்ற தேர்தலுக்கும் இடையே தமிழக வெற்றி கழகம் எனும்
தனது கட்சி பெயருடன் களத்தில் குதித்து இருக்கிறார்.
அவருடைய ரசிகர்கள் மனதில் உற்சாகம் பெருகி இருக்கிற இந்த வேளையில் ஒரு அடிப்படையான அரசியல் சித்தாந்தம் சார்ந்த அல்லது கட்சி ரீதியான அமைப்பாக தமிழகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் ஒரு நிர்வாக ரீதியான முறையை அவர் இதுவரை ஏற்படுத்திக் கொண்டிருக்கவில்லை. என்கிற விமர்சனத்திற்கு அப்பால் தனிப்பட்ட முறையில் பெரும் ரசிகர் மன்றங்களை தமிழகம் முழுதும் நிக்கமற அவர் கொண்டிருக்கிறார் என்பதும் ஊர்ஜிதம் ஆகிறது.இது அவருக்கு பலம். விஜய்க்கெல்லாம் அரசியல் பற்றி என்ன தெரியும்?” என்றும்…
“விஜயெல்லாம் வரட்டும்யா… வந்து என்ன பண்ணப்போறார்னு பார்ப்போம்..’’ சொன்னார்கள்
உண்மையில் மிகமிக துல்லியமான திட்டமிடல், தெளிவான வியூகம், கண்ணியமான வார்த்தைப் பிரயோக அறிக்கை..
முதலமைச்சர் ஆகக்கூடிய சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளாமல் விட்ட ரஜினிகாந்த் மற்றும் ரஜினி அளவுக்கு செல்வாக்கு இல்லாத போதும் போதிய திட்டமிடல் இல்லாமல் அரசியலுக்குள் வந்து வீழ்ந்து போன விஜயகாந்த் இருவரது வாழ்க்கையில் இருந்தும் சரியான பாடங்களை கற்றுக் கொண்டிருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது…
தனது ரசிகர்களை முழுமையான அரசியல்மயப்படுத்தி தயார்படுத்த 2 ஆண்டுகள் முன்னதாக கட்சியை அறிவித்ததிலும் மிகச்சரியான முடிவுகள்…
எடுத்த எடுப்பிலேயே கட்சிப் பெயரில் “க் “சேர்க்காததை எதிர்மறை கவனயீர்ப்பாகப் பயன்படுத்தி இருக்கிறார்களோ! என்று சந்தேகம் வருகிறது. அதுபோக தமிழக வெற்றி கழகம் என்பதை டி வி கே என்று சுருக்கமாகப் பார்த்தோமானால்
தமிழக விஜய் கழகம் என்றும்
அர்த்தம் பெறுவதை உள்ளடக்கமாக
கொண்டிருக்கலாமோ என்றும் எனக்குத் தோன்றுகிறது.
எல்லாவற்றையும் விட மிக முக்கியமான முடிவு… சாதாரண மக்கள் மத்தியில் விஜய் மீது ஒரு ஈர்ப்பு கொண்டுவர வைக்கும் முடிவு… தனது மார்க்கெட் உச்சத்தில் … இன்றைக்கு ஒரு படத்திற்கு ₹150 கோடிகள் கொடுத்த தயாரிப்பாளர்கள் காத்திருக்கும் நிலையில்… விஜய் நினைத்தால் வருடத்திற்கு 2 படங்கள் என்று அடுத்த 10 ஆண்டுகளுக்கு சர்வ சாதாரணமாக ₹3000 கோடிகளை தாண்டி சம்பாதிக்க வாய்ப்பிருந்தும் அதனை விட்டுவிட்டு “அடுத்த படத்துடன் திரையுலகில் இருந்து விடைபெறுகிறேன்” என்று சொன்னது மிகப்பெரிய விசயம்… அந்த அறிக்கையின் மாஸ்டர் ஸ்ட்ரோக் அதுதான்…
இனி தமிழ்நாட்டில்”தமிழ்,தமிழ்நாடு முன்னுரிமை அதற்கடுத்து இந்திய தேசியம், தேசிய ஒருமைப்பாடு” இதுதான் இனி தமிழகத்தின் பாதையாக இருக்கும் என்பதை மிகச்சரியாக பிடித்துள்ளார் விஜய்… ஊழலற்ற , வாரிசு முறையற்ற நேர்மையான மக்கள் நல ஜனநாக அரசியல், தமிழக உரிமைகள், ஈழத்தமிழர் சிக்கல் என இன்றைய சூழலில் பின நவனீத்துவ- இருத்தல் வாத போக்கில் வல்லமையோடு விஜய் தன் அரசியல் பயணத்தை தொடங்கவரா? அவரின் செயல்திட்டம் என்ன என்பதை
சொல்ல வேண்டும். 50 வயதை எட்டிய அவருக்கு,அதுதான் வெற்றிக்கான பாதையும் கூட…
விஜய் ரசிகர்களது கடந்த 2, 3 ஆண்டுகால செயல்பாடுகளை பார்த்தால் அரசியல் பற்றிய அடிப்படை புரிதல் சிறிதளவும் இல்லாமல் இருக்கின்றனர்.. அவர்கள் தனிப்பட்ட முறையில் செய்யும் தவறுகள் கூட விஜய்கட்சி மீது லேபிள் ஒட்டப்படும்…
பெரும்பாலான மக்கள் ஓட்டுக்கு பணம் வாங்குவது தங்களது உரிமை என்று நம்பத்தொடங்கி சில ஆண்டுகள் ஆகிறது… கட்சி தொண்டர்களும் தேர்தல் வேலை செய்வதற்கு தினசரி சம்பளம் மற்றும் இதரசெலவுகள் எதிர்பார்க்கின்ற காலம்… எம்ஜிஆர், கலைஞர் காலத்தில் எல்லாம் ஒரு டீ குடித்துவிட்டு நாள் முழுவதும் கட்சி கொடிகளை கட்டி, போஸ்டர் ஒட்டிய தொண்டர்கள் இப்போது கிடையாது.. எல்லாவற்றுக்கும் பணம்… நான் இறுதியாக போட்டியிட்ட 1996
பொதுத்தேர்தல் வரை அறம் சார்நத அரசியல் பணிகள் இருந்தன. இப்போம் எல்லாம் உழைப்புக்கு சம்பளம் என எல்லாமே பணமயமாகிவிட்டது. ஜனநாயக மாறி அரசியல் பண நாயகமாகி விட்டது.
அதேபோல எம்ஜிஆர் தனிக்கட்சி தொடங்கிய பின்னரும் ஆட்சியை பிடிக்கின்ற வரை 5 ஆண்டுகள் தொடர்ந்து நடித்துக்கொண்டே இருந்தார்… அதன்மூலம் மக்களுடன் கனெக்ட்ஆகவே இருந்தார்… விஜய் உடனடியாக படங்களில் நடிப்பதை நிறுத்திவிடுகிறார்… அதேநேரம் மீடியாக்களை அடிக்கடி சந்தித்தாலும் இவர் சொல்வதை வேறு மாதிரி வெட்டிஒட்டி இவருக்கு எதிராகவே மக்களிடம் பரப்பிவிடும் சில பணம் பெறும் அயோக்கியர்கள் மீடியாக்கள்… அதனை எப்படி கையாளப் போகிறார் என்று தெரியவில்லை…பாஜக வளர்சியும் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. திராவிட, தமிழ் தேசிய அரசியல் வேறு.
கடைசியாக ஒன்று… எனக்குத்தெரிந்து 1994 முதல் மதிமுகவில் பயணித்தும், 2005 முதல் தேமுதிகவில் பயணித்தும் சொந்த பணத்தை ஏகப்பட்ட அளவு செலவழித்து வாழ்க்கையை தொலைத்தவர்களும் 1990கள் முதல் ரஜினி அரசியலுக்கு வருவார் என்று நம்பி ஏராளமான பணத்தை வாரிஇறைத்து கடனாளி ஆகி காணாமல் போனவர்களும் அதிகம்… அந்த வகையில் உங்களை நம்பி வரும் ரசிகர்களை சொந்த வாழ்க்கையில் தோற்க விட்டுவிடாதீர்கள்… ரஜினி அரசியலுக்கு வருவதாக முதல்முறை அறிவித்த 2017ல் தனது ரசிகர்களுக்கு சொன்ன “முதலில் உங்க குடும்பம், தொழில், வாழ்க்கை அதை நல்லபடியாக பார்த்துக்கொள்ளுங்கள்.. அதன்பிறகு நேரமும் ஆர்வமும் இருந்தால் அரசியலுக்கு வாருங்கள்” என்ற அறிவுரையை நீங்களும் உங்களை வெறித்தனமாக ரசிக்கும் ரசிகர்களுக்கு சொல்லுங்கள்…
இன்று அரசியல் தொழில், வியாபாரம் ஆகிவிட்டது. இதன் துவக்கம் கடந்த 2000….
ஆனா மக்களே….
வெளிய தன்னை ஒரு பெரிய போராளியா காமிச்சிட்டு உள்ளுக்குள்ள எல்லாரும் நல்லா சம்பாதிச்சிட்டு தான் இருக்காங்க…
நாம்தான் உண்மை முகம் தெரியாமல் see more பண்ணிக்கிட்டு இருக்கோம்.
அரசியலாகட்டும் அல்லது ஒரு தொழிலாக இருக்கட்டும். அதில் அனுபவப்பட்டுப் படிப்படியாக முன்னேறி வந்து அதை ஆளுமை செய்வதோடு மக்கள் மத்தியில் தங்கள் செயலுக்கு நன்மதிப்பை பெற வேண்டும்.
போக அவர் இதுவரை திரைத்துறையில் மேற்கொண்ட அனைத்து திரைப்படங்களின் வரிசைகளை ஒருங்கிணைத்து பார்க்கும் போது தமிழகத்திற்கே உரிய வழக்கமான மக்கள் செல்வாக்கு அவருக்குப் பல காலம் ஆதரவாய் இயங்கி வந்திருக்கிறது என்பதையும் ஏற்க வேண்டி இருக்கிறது.
ஜனநாயகப்பூர்வமான விஷயங்களில் மக்கள் என்ன விரும்புகிறார்கள் என்பது மிக முக்கியமானது.இதுவரை அவர்கள் பல ஆட்சிக்கட்டில்களை மாற்றி அமைத்திருக்கிறார்கள்.
தீவிரமான முன்னணி கட்சிகள் தங்களது ஆட்சியில் எத்தனை விதமாக மக்கள் பணி செய்திருந்தாலும் மக்களின் நம்பிக்கையை பொறுத்தவரை அவர்களுக்கு மாற்றங்களும் புதிய முகங்களும் தேவைப் படுகின்றன.
தந்தையின் தோள்களில் ஏறி வாரிசுகள் என்ற பெயரில் அதன் உரிமையில் உச்சபட்சமான பதவிகளுக்கு எந்த தகுதியும் இல்லாமல் சுலபமாக வந்து விடுவது அபத்தமாக மாறிவிடுகிறது ஒழிய ஒரு நன்மைக்கும் அது பொருந்துவதில்லை. எனக்கு தெரிய இந்தியாவின் எல்லா மாநிலங்களும் இன்று வாரிசு அரசியலின் கீழ் தான் நிலைபெறுகின்றன. இப்படித் தொடர்ந்து வாரிசுகளின் பேரில் பதவியை பிடிக்கும் எவரும் அங்கே நல்லாட்சி கொடுத்ததாக வரலாறு இல்லை. வாரிசு அரசு குடும்பங்களில் இந்தியா அளவில் நிம்மதி இல்லை.
தேவைகளும் மாற்றங்களும் அவர்களை பரிதவிக்க வைக்கின்றன. நம்பிக்கையான முகம் ஒன்று அவர்களுக்கு வரலாறு முழுக்க தேவைப்பட்டிருக்கிறது.
அந்த வகையில் இந்த புதிய கட்சி திராவிடஆட்சிகளின்அதிருப்தியாளர்களை ஒருங்கிணைக்கும் என்கிற முறையிலும் கூட வரவேற்பு அடைவதைக் காண முடிகிறது.
மிக நுட்பமான அரசியல் பார்வையை வைத்து பார்த்தோமேயானால் இதற்கான பல பின்னணிகள் இருக்கின்றன என்பதை நாம் நிரூபிக்க முடியும்.
ஒருபுறம் திராவிட அரசியலின் ஏகபோகமும் மறுபுறம் இடது- வலதுசாரி கட்சிகளின் கருத்தியல் திணிப்புகளும் மக்களை சோர்வடையச் செய்திருக்கின்றன என்றே தோன்றுகிறது.
இந்தப் பார்வை தமிழகத்திற்கு மட்டுமே பொருந்துகிறது.எடுத்த எடுப்பிலேயே கட்சிப் பெயரில் “க் “சேர்க்காததை எதிர்மறை கவனயீர்ப்பாகப் பயன்படுத்தி இருக்கிறார்களோ! என்று சந்தேகம் வருகிறது.ஊடகங்களிலும் இணையதளங்களிலும் பத்திரிகைகளிலும் இந்த “க்” சேர்க்காததைப் பற்றிய பேச்சுக்கள் அதிகரிக்கின்றன. அதுவே ட்ரோலாகி வருகிறது.
இது போக எம்ஜிஆர், எனடிஆர் சொல்லத நடிகர் விஜய் இனி நான் திரைப்படங்களில் நடிக்க போவதில்லை என்றும் சொல்லியிருக்கிறார். பான் இந்தியா திரைப்படங்கள் மற்றும் டான் ஹேங்ஸ்டர் என சினிமா உலகம் மாபெரும் அலுப்பாக தொழில்நுட்ப கலைகளை வைத்து ஏமாற்றும் பிம்ப வன்முறையாக மாறிக்கொண்டிருக்கும் வேளையில்மிகச் சரியான முறையில் அதை விட்டு தான் வெளியே வருவதாக அறிவித்து இருக்கிறார்.
மக்களின் முன்பாக மக்களை போல நிற்க வேண்டும் சினிமா ஒரு தொழில் முறை மட்டும் தான் ஆனால் மக்கள் ஒருவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கை மிக மிக முக்கியம் அதற்கான கைமாறு என்ன என்கிற கேள்வியோடு சினிமாவை விட்டு வெளியேறி அரசியல் தளத்திற்கு செல்வது என்பது அவர் மனதிற்கு சரியானதாகப்பட்டிருக்கலாம்.
இல்லையெனில் திராவிட பிம்ப அரசியலில் சமீபகாலமாக உருவாக்கி வரும் வாரிசு மற்றும் கதாநாயக அரசியல் முன்னெடுப்பை எதிர்கொள்வதற்காகவும் அவர் சினிமாவை விட்டு வெளியேறி இருக்கலாம்.
தமிழ் சினிமாவைப் பொறுத்த வரையில் அதன் கதாநாயக அந்தஸ்தில் வளர்ந்தவர்கள் பொதுவெளி அரசியலில் தங்களுக்கு ஏதேனும் இடர் ஏற்படும் போது தங்களுக்குரிய மக்கள் செல்வாக்கை வைத்துக்கொண்டு ஏன் நாமே ஒரு அரசியல் கட்சியைத் தொடங்கக்கூடாது என்று நினைப்பது கடந்த 50 ஆண்டுகளில் தொடர் கதை ஆகிவருகிறது.
இந்தப் பார்வை நடிகர் விஜயின் புதிய கட்சிக்கு ப் பொருந்துமா?
மற்றபடி ஆளுங்கட்சிக்கு ஆதரவாக ஓட்டுகளை பிரிக்கத்தான் புதிய கட்சி தொடங்கியுள்ளார் என்றும் விஜய் எப்படி தமிழ்நாட்டிற்கு முதலமைச்சர் ஆக முடியும் என்றும் பல யூகங்களையும் சந்தேகங்களையும் இடையே எழுப்புகிறார்கள்.பணம் பதவி ஆட்சி முறை என்று மாறி வருகிற இன்றைய நவீன சூழலில் இதை எல்லாம் எதிர்கொண்டு விஜய் அரசியலில் முன்னிடத்தைப் பெறுவாரா?
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் இவரது பிரச்சாரம் யாருக்கு எப்படி ஏதுவாக இருக்கும் என்றெல்லாம் கேள்விகள் தொடர்கின்றன.
விவரம் அறிந்த வட்டாரங்கள் ரஜினியின் ரசிகர் மன்றங்கள் போல் அல்ல இவை தமிழ்நாடு எங்கும் பல்வேறு வகையில் மாவட்ட ரீதியாக வலுவாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்றும் கூறுகிறார்கள்.
அதிகமாக இளைய சமூகங்கள் இளைய வயதினரின் ஆதரவை பெற்றுள்ளார் எனவும் பேசப்படுகிறது. பழைய மூன்றாவது அணிகள் என்ன செய்தார்கள் என்று அறிந்தவன் நான். எனது கேள்விகள் சில.
வீசப்படும் 10 ரூபாய் நோட்டுக்களைப் பிடிக்க ஆலாய்ப்பறந்து, கோடிக்கணக்கான கரங்கள் நீளுகின்ற ஒரு தேசத்தில் நிலைகளில் எப்படி இருக்குமோ?
பிம்பஅரசியலில் ஊடகங்கள் செய்திகள் மின்னணு தகவல் தொழில் நுட்பங்கள் யாவும் இவருக்கு உதவுமா?
இல்லை பலமான அஸ்திவாரங்களை சிறிதளவில் நடுக்கமுறச் செய்யும் அதிர்வுகளை மட்டும் உண்டாக்குவாரா ?
இன்று பிறந்த இந்த அமைப்புக்கு வாழ்த்துக்கள…..
பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!