திருவெற்றியூரில் நவீன கழிப்பறை கட்ட பக்தர்கள் கோரிக்கை
தொண்டி, பிப்.13-
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பாகம்பிரியாள் சமேத ஸ்ரீவல்மீக நாதர் திருக்கோயில் உள்ளது. சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட இக்கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தருகின்றனர். வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் அதிக அளவில் பக்தர்கள் வருகை தருகின்றனர். பக்தர்கள் வருகைக்கு தகுந்த சுகாதார வசதிகள் செய்யப்படவில்லை. இங்கு கோயில் நிர்வாகத்தால் கட்டப்பட்ட கழிப்பறை கட்டிடம் வசதியாக இல்லை. இதனால் இயற்கை உபாதைகளுக்கு இங்கு வரும் பக்தர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இதனால் கண்மாய்கரை போன்ற பகுதிகளை தேடிச்செல்கின்றனர் இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. தங்களது குறைகளை போக்க மனக்கஷ்டத்தை கூற சாமி கும்பிட வரும் பக்தர்கள் காலைக்கடன்களை கழிக்க சிரமப்படுவது மேலும் மன உளைச்சலை ஏற்படுத்துவதாக உள்ளது. எனவே அரசு இங்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு நவீன வசதிகளுடன் போதிய இடவசதியுடன் சுகாதாரமான பொது கழிப்பறை கட்ட அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.