டெல்லி மேயர் தேர்தலில் நியமன உறுப்பினர் வாக்களிக்க முடியாது
புதுடெல்லி: டெல்லி மேயர் தேர்தலில் நியமன உறுப்பினர் வாக்களிப்பதற்கு அனுமதி இல்லை என்றும் இதற்கான அரசியலமைப்பு விதிமுறைகள் தெளிவாக உள்ளதாகவும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு குறிப்பிட்டு உள்ளது.
டெல்லி மாநகராட்சியில் மொத்தமுள்ள 250 இடங்களுக்கு கடந்த டிசம்பரில் நடைபெற்ற தேர்தலில், ஆம் ஆத்மி 134, பாஜக 104, காங்கிரஸ் 9, சுயேச்சைகள் 3 இடங்களையும் பெற்று வெற்றிபெற்றனர்.
இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக மேயர் தேர்தல் அடுத்தடுத்து தள்ளிவைக்கப்பட்டது.
மூன்று முறை முயற்சி செய்தும் தேர்தலை நடத்துவதில் தோல்வியே ஏற்பட்டது.
இந்தச் சூழலில், டெல்லி மேயர் தேர்தலை காலக்கெடுவுக்குள் நடத்தி முடிக்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி மேயர் வேட்பாளர் ஷெல்லி ஓபராய் வழக்குத் தொடர்ந்தார்.
இவ்வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமை யிலான அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது “தேர்தலில் நியமன உறுப்பினர்கள் வாக்களிக்க முடியாது. அரசியலமைப்பு விதி முறைகள் மிகவும் தெளிவாக உள்ளது,” என்று அமர்வு குறிப்பிட்டது. இதையடுத்து இவ்வழக்கை வரும் 17ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.
இதைத்தொடர்ந்து நாளை 16ஆம் தேதி நடக்க இருந்த மேயர் தேர்தல் நாளை மறுநாள் 17ஆம் தேதிக்குப் பிறகு நடத்த வாய்ப்புள்ளதாக நீதிமன்றத்தில் துணை நிலை ஆளுநர் அலுவலகம் சார்பில் முன்னிலையான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சஞ்சய் ஜெயின் கூறினார்.