நட்பு நாடுகளுக்கு அழைப்பு விடுக்கிறது இந்தியா பாதுகாப்பு சவாலை எதிர்கொள்ள ஓரணியில் இணையவேண்டும்
பெங்களூரு: பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள ஒன்றிணைய வேண்டும் என்று நட்பு நாடுகளுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அழைப்பு விடுத்துள்ளார்.
பெங்களூருவில் நடைபெற்ற விண்வெளிக் கண்காட்சியில் நேற்று பங்கேற்றபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பல்வேறு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களும் கலந்துகொண்ட கண்காட்சி நிகழ்வில் ராஜ்நாத் சிங் பேசியபோது, “உதவி தேவைப்படும் நாடுகளுக்கு அறிவுரைகள் கூறுவதோ வெளிப்படைத் தன்மையின்றி தீர்வுகளை வழங்குவதோ எந்த ஒரு பயனும் தராது. இதில் இந்தியாவுக்கும் நம்பிக்கை இல்லை.
“அனைத்து நாடுகளையும் இந்தியா சமமாகக் கருதுவதால்தான் உத்தரவிடுவதில் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை,” என்றார்.
தொடர்ந்து பேசியவர், “வளர்ந்த நாடு என்பதாலும் ராணுவம், தொழில்நுட்பத்தில் முன்னேறிய நாடு என்பதாலும் ஒரு நாடு மற்ற நாட்டிடம் அதிகாரத் தோரணையுடன் உத்தரவுகளைப் பிறப்பிக்க முடியாது,” என்று தெரிவித்தார்.
உதவி என்பது நிறுவனங்களைக் கட்டமைப்பதாக, இணக்க மான முறையில் செயல்படுவதாக இருக்கவேண்டும் என்றும் இந்தியா தனது நட்பு நாடுகளுக்கு இத்தகைய பாதுகாப்பு உத்தரவாதத்தை அளிக்கவே விரும்புகிறது என்றும் கூறினார்.
“நாங்கள் உங்களோடு இணைந்து இருப்போம்; தோளோடு தோள் கொடுத்து, வளர்ச்சியை உருவாக்குவோம்.
“இரு நாடுகளுக்கு இடையேயான உறவு மதிப்புமிக்கதாக இருப்பது அவசியம்.
“ஒரு நாடு மற்ற நாட்டிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்; இணைந்து வளர வேண்டும். இதுதான் இரு தரப்புக்கும் வெற்றி தரக்கூடிய வழிமுறை,’’ என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
மேலே இருந்துகொண்டு கீழே இருப்பவர்களுக்கு உத்தரவிடும் அணுகுமுறை ஒருபோதும் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு தராது. கீழே இறங்கி வந்து தோளோடு தோள் நின்று வழங்கப்படும் தீர்வுகள்தான் நீடித்த நல்ல பலனை அளிக்கும்.
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்