வாழ்க்கையைக் கொண்டாட விரும்பிய புற்றுநோயாளியின் கடைசி ஆசை
பானாஜி: “எனக்கான வாழ்க்கை யைக் கடைசியாக ஒருமுறை கொண்டாட விரும்புகிறேன்,” என்று கூறிய ஒரு புற்றுநோயாளியின் கடைசி ஆசையை அவரது குடும்பத்தாரும் மருத்துவர்களும் சேர்ந்து நிறைவேற்றி வைத்தனர்.
அந்தக் கொண்டாட்டம் முடிவுற்ற அன்றைய இரவே அந்த இளம் நோயாளியின் கண்ணீர் நிறைந்த பயணம் முடிவுக்கு வந்தது. இந்த நெகிழ வைக்கும் சம்பவம் தொடர்பான செய்தியும் புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.
கோவாவைச் சேர்ந்தவர் ஆஷ்லே நோரோன்ஹா. 28 வயதான அவர், Myeloid Leukamia என்ற புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது நோய் முற்றிப்போனது.
மரணத்தின் வாயிலில் நிற்பதை உணர்ந்த ஆஷ்லே, அதற்காக கண்கலங்கவில்லை. மாறாக, வாழ்வின் கடைசித் தருணங்களைக் கொண்டாட முடிவு செய்தார். அவரது இந்த விருப்பம் குடும்பத்தார் மூலம் அவரது சிகிச்சை, பராமரிப்புக்கு உதவி வந்த சமூக அமைப்பின் நிர்வாகத்துக்கு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து ‘பிரிவு உபசார’ நிகழ்வு போன்ற கடைசிக் கொண்டாட்டத்துக்கு அந்த அமைப்பு ஏற்பாடு செய்தது. அவரது அறையை பலூன்கள் கொண்டு அலங்கரித்தனர்.
தாம் நோயாளியாகக் காட்சிஅளிப்பதை ஆஷ்லே விரும்பவில்லை. அதனால் அவரது பல நாள் தாடியும் மீசையும் மழிக்கப்பட்டது. தலைமுடியும் திருத்தப்பட்டு, லேசான ஒப்பனைக்குப் பிறகு தலையில் தொப்பியுடனும் உற்சாகப் புன்னகையுடனும் புகைப்படத்துக்குப் ‘போஸ்’ கொடுத்தார் ஆஷ்லே.
குடும்பத்தாருடன் ஓரிரு மணி நேரங்கள் சிரித்துப் பேசியவருக்கு, கொண்டாட்டம் நடைபெற்ற அறையில் அலங்காரத்துக்காக வைக்கப்பட்டிருந்த பலூன்களே பரிசுகளாக வழங்கப்பட்டன.
அன்றைய இரவு அனைவரிடமும் விடைபெற்று படுக்கச் சென்ற ஆஷ்லே பின்னர் கண்விழிக்கவே இல்லை. கடந்த மாத இறுதியிலேயே அவர் காலமாகிவிட்ட நிலையில், அந்தக் கடைசி நிகழ்வு குறித்த தகவல் சமூக ஊடகங்களில் இப்போது பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
“நல்ல பாடல்களை ஒலிக்கச் செய்து கேட்டார். நகைச்சுவையாகப் பேசினார். சோகமாக இருந்தால் புற்றுநோய் விரைவாக தன் உயிரைப் பறித்துவிடும் எனச் சிரித்தபடி கூறினார்.
“மரணம் தழுவும் கடைசி நொடியில் ஆஷ்லே தன் மனதில் என்ன நினைத்தார் என்பது தெரியாது. ஆனால் எங்களிடம் இருந்து சிரித்த முகமாய் விடைபெற்றார். நாங்கள்தான் அழுது கொண்டிருக்கிறோம்,” என்று ஆஷ்லேயின் குடும்பத்தார் கூறுகின்றனர்.