பெண் கிடைக்காமல் அவதி; திருமணமாக வேண்டி 210 ஆண்கள் 105 கி.மீ. பாதயாத்திரை
பெங்களூரு: பெண் கிடைக்கும் எனும் நம்பிக்கையில், 30 வயதைக் கடந்த 200க்கும் மேற்பட்ட ஆண்கள் மாதேஸ்வர மலைக் கோவிலுக்கு 105 கி.மீ பாதயாத்திரை மேற்கொள்ளவிருக்கிறனர்.
இம்மாதம் 23ஆம் தேதி மடூர் வட்டத்தில் இருக்கும் கே எம் டோடி எனும் சிற்றூரில் இருந்து இந்த நடைப்பயணம் தொடங்குகிறது. மூன்று நாள்களில், அதாவது 25ஆம் தேதி அவர்கள் அக்கோவிலைச் சென்றடைவர்.
தமது ஊரில் வசிக்கும் பெண்கள், விவசாய வேலை செய்யும் ஆண்களைத் திருமணம் செய்ய விரும்புவதில்லை என்றும் பெங்களூரு போன்ற பெருநகரில் வேலை செய்யும் ஆண்களையே மணமுடிக்க அவர்கள் விரும்புகின்றனர் என்றும் கூறி ஆதங்கப்பட்டார் மடூர் பகுதியில் வசிக்கும் திரு பி.மல்லேஷ், 33.
“கடந்த நான்கு, ஐந்து ஆண்டுகளாகப் பெண் தேடிக்கொண்டிருக்கிறேன். ஆனால், வரும் வரன்கள் அனைவரும் என்னைப் போன்று வேளாண் தொழில் செய்வோரை மணம்புரிய விரும்புவதில்லை,” திரு என்றார் மல்லேஷ்.
‘மணமாகாதோர் பாதயாத்திரை’ என்றழைக்கப்படும் இந்த நடைப்பயணத்தைத் தம் நண்பர்களோடு சேர்ந்து ஏற்பாடு செய்துள்ளார் திரு கே.எம்.சிவபிரசாத்.
இதன் தொடர்பில் பல்வேறு சமூக ஊடகங்கள் வழியாக அவர்கள் விளம்பரம் செய்ய, விண்ணப்பங்கள் குவிந்தன.
“மாண்டியா, மைசூரு, ஷிவமொக்கா, சாம்ராஜநகர் எனப் பல பகுதிகளில் இருந்தும் விண்ணப்பங்கள் வந்தன. 300க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்த நிலையில் கிட்டத்தட்ட 210 பேர் நடைப்பயணத்தில் பங்கேற்பதை உறுதிசெய்துள்ளனர்,” என்றார் அவர்.