“தூத்துக்குடியில் 1500லிட்டர் பால் பறிமுதல், தனியார் பால் நிறுவனங்களுக்கு ஆவின் அதிகாரிகளின் மறைமுக மிரட்டல்..!”?
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள்நலச்சங்கம் நிறுவனத்தலைவர் சு.ஆ.பொன்னுச்சாமி அறிக்கை
இந்தியாவின் வடமாநிலங்கள் பலவற்றில் கறவை மாடுகளுக்கு தோல் கட்டி நோய் பரவியதில் கடந்த மூன்றாண்டுகளில் லட்சக்கணக்கான கறவை மாடுகள் இறந்து போனதால் இந்தியா முழுவதும் பால் உற்பத்தியில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. இதனால் தமிழகத்தில் பால் வணிகத்தில் ஈடுபட்டு வரும் தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களோடு வடமாநிலங்களைச் சேர்ந்த தனியார் நிறுவனங்கள் ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக் கொண்டு பால் உற்பத்தியாளர்களுக்கு பாலுக்கான கொள்முதல் விலையை அதிகமாக வழங்கி கொள்முதல் செய்கின்றன.
மேலும் தமிழகத்தில் அரசு நிறுவனமான ஆவினிற்கு பால் வழங்கும் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு குறித்த காலத்தில் பாலுக்கான தொகையை பட்டுவாடா செய்யாததாலும், பாலுக்கான கொள்முதல் விலையை நியாயமான அளவில் உயர்த்தி வழங்காததாலும், ஆவின் நிறுவனத்தின் சார்பில் மானிய விலையில் வழங்கப்பட்ட கால்நடை தீவனங்கள் நிறுத்தப்பட்டு விட்டதாலும் தமிழக அரசின் பொதுத்துறை கூட்டுறவு நிறுவனமான ஆவினிற்கான பால் வரத்து கடுமையாக குறைந்து போனதால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஆவின் பாலிற்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழக அரசின் பாலுற்பத்தி மற்றும் பால்வள மேம்பாட்டுத்துறை அதிகாரிகளின் மெத்தனத்தாலும், தமிழக அரசின் அலட்சியத்தாலும் ஆவினுக்கான பால் கொள்முதல் என்பது தற்போது வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியடைந்ததால் தங்கள் மீதான தவறுகளை மறைக்க ஆவின் நிர்வாகமும், பாலுற்பத்தி மற்றும் பால்வள மேம்பாட்டுத்துறையும் தனியார் பால் நிறுவனங்களை குறி வைத்து செயல்படத் தொடங்கியுள்ளதோடு, கடந்த இரண்டு ஆண்டுகளாக இல்லாமல் தற்போது திடீரென்று ஆவின் அதிகாரிகள், பால்வளத்துறை மற்றும் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் குழு தனியார் பால் நிறுவனங்களை குறி வைத்து முடுக்கி விடப்பட்டுள்ளது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.
ஏனெனில் ஆவினிற்கான பால்வரத்து கடுமையாக குறைந்து போனதால் சேலம், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள தனியார் பால் நிறுவனங்களின் பால் கொள்முதல் நிலையங்களில் அதிரடி சோதனைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்திருந்ததோடு சேலத்தில் 5குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்டங்களின் ஆவின் பொது மேலாளர்கள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த 2006-2011 திமுக ஆட்சி காலத்தில் இதே போல் ஆவினில் கடுமையான பால் தட்டுப்பாடு ஏற்பட்டு, தற்போதைய சூழல் அப்போதும் நிலவியது, அதன் பிறகு ஆட்சி மாற்றம் நடைபெற்று, அம்மையார் ஜெயலலிதா அவர்களின் தலைமையில் அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் ஆவின் பால் தட்டுப்பாட்டை உடனடியாக சரி செய்ய வேண்டும் என 2011ம் ஆண்டு இறுதியில் திரு. சிவபதி அவர்கள் பால்வளத்துறை அமைச்சராக இருந்த சமயத்தில் தனியார் பால் நிறுவனங்களின் உயரதிகாரிகளோடு கூட்டம் நடத்தி ஒவ்வொரு நிறுவனமும் ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்கின்ற குறைந்த விலைக்கு ஆவினுக்கு தினசரி ஒரு டேங்கர் (10ஆயிரம் லிட்டர்) பால் வழங்க வேண்டும் அல்லது பால் வழங்க மறுக்கும் நிறுவனங்கள் மீது பால் கலப்பட வழக்கு பதிவு செய்வோம் என அப்போதைய அரசு தரப்பிலிருந்து மிரட்டல் விடுக்கப்பட்டதோடு, பால் தர மறுத்த ஆந்திராவைச் சேர்ந்த முன்னணி தனியார் பால் நிறுவனத்தின் பால் டேங்கர் லாரியை வேலூரில் மடக்கிய கால்நடை மருத்துவரான அலெக்ஸ் என்பவரால் அந்த டேங்கர் லாரியில் இருந்தது கலப்பட பால் என உண்மைக்கு மாறாக அப்போது வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
12ஆண்டுகளுக்குப் பிறகு ஆவினில் நிலவும் பால் தட்டுப்பாட்டை சரி செய்ய மீண்டும் முந்தைய ஆட்சியின் அணுகுமுறையை தற்போது ஆவின் நிர்வாகம் மீண்டும் கையிலெடுத்து தனியார் பால் நிறுவனங்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டுள்ள நிலையில் இன்று (06.03.2023) தூத்துக்குடி மாவட்டத்தில் ஆய்வு செய்த அதிகாரிகள் குழு 1500லிட்டர் பாலினை கைப்பற்றி பறிமுதல் செய்து அது கலப்பட பால் என ஊடகங்களில் செய்திகளாக வந்துள்ள தகவல் அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.
அதுமட்டுமின்றி உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்விற்கு செல்லும் போது ஊடகங்களுக்கு தகவல் தெரிவிக்கக் கூடாது, ஆய்வுகள் தொடர்பாக ஊடகங்களில் காட்சி வெளியிடக் கூடாது என ஒரு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் இன்று (06.03.2023) உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகளின் செயல்பாடுகள் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை அவமதிப்பதாக அமைந்துள்ளது.
மேலும் கடந்த ஜனவரி மாதம் தென்காசியில் இருந்து கேரளாவிற்கு டேங்கர் லாரியில் கொண்டு செல்லப்பட்ட தனியார் நிறுவனத்தின் 15ஆயிரம் லிட்டர் பால் “ஹைட்ரஜன் பெராக்சைடு” கலப்படம் செய்யப்பட்டிருந்ததாக கூறி மொத்த பாலும் தமிழ்நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டதாக (ஒரு சில ஊடகங்களில் மட்டும்) செய்தி வெளியான நிலையில் தமிழ்நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்ட அந்த கலப்பட பால் என்னவானது..? கலப்பட பாலினை கேரளாவிற்கு அனுப்பிய தனியார் பால் நிறுவனம் எது..? அது தொடர்பாக உணவுப் பாதுகாப்புத்துறை சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன..? அப்போது பாலுற்பத்தி மற்றும் பால்வள மேம்பாட்டுத்துறை அதிகாரிகளும், ஆவின் நிர்வாகமும் வாய்மூடி மெளனமாக இருந்தது ஏன்..? அது குறித்து தமிழக அரசு தரப்பிலோ, பால்வளத்துறை அமைச்சர் தரப்பில் இருந்தோ எந்த ஒரு அறிக்கையும் ஏன் வெளியிடப்படவில்லை..? என்பன போன்ற எண்ணற்ற கேள்விகளுக்கு விடை தெரியாத போது தற்போதைய நடவடிக்கைகள் தனியார் பால் நிறுவனங்களை மறைமுகமாக மிரட்டும் செயலாகவே தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் பார்க்கிறது.
உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய அதிகாரிகளுக்கு பொதுமக்கள் நலன் மீது உண்மையான அக்கறை இருக்குமானால் தமிழக அரசினுடைய ஆவின், பாலுற்பத்தி மற்றும் பால்வள மேம்பாட்டுத்துறை அதிகாரிகளின் தலையீடு இல்லாமல் ஆவின் மற்றும் தனியார் பால் நிறுவனங்களின் அனைத்து கொள்முதல் நிலையங்களிலும் நியாயமான முறையில் அதிரடி சோதனைகள் மேற்கொள்ள வேண்டும், தவறு நடைபெற்றது ஆவின் கொள்முதல் நிலையங்களாக இருந்தாலும், தனியார் நிறுவனங்களின் கொள்முதல் நிலையங்களாக இருந்தாலும் எந்த ஒரு சமரசத்திற்கும் இடம் கொடாமல் உண்மையை உலகறிய செய்ய வேண்டும், அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பாலில் கலப்படம் செய்வோர் அரசு அதிகாரிகள், தனியார் நிறுவனங்கள் என அது எவராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், குறிப்பாக பாலில் கலப்படம் செய்வோருக்கு ஆயுள்தண்டணை விதிக்கும் வகையில் மாநில அரசுகள் சட்டமியற்ற வேண்டும் என்கிற உச்சநீதிமன்றத்தின் உத்தரவிற்கேற்ப அதற்கான வழிவகைகளை அரசு செய்ய வேண்டும் என கடந்த 2011ம் ஆண்டு முதலே எங்களது சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது
எனவே ஆவினும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதல்ல, அதில் பணிபுரியும் அதிகாரிகள் அனைவரும் நேர்மையான நீதிமான்கள் அல்ல என்பதால் தமிழகத்தில் உள்ள ஆவின் மற்றும் தனியார் நிறுவனங்களின் அனைத்து பால் கொள்முதல் நிலையங்களிலும் அதிரடி சோதனைகள் மேற்கொண்டு அவை முறையாக உரிமம் பெற்று, குறித்த காலத்தில் அவை புதுப்பிக்கப்பட்டு செயல்படுகிறதா..? என்பதையும், அந்த கொள்முதல் நிலையங்களில் சுகாதாரம் முறையாக பேணப்படுகிறதா..? பால் கலப்படமின்றி தரமானதாக இருக்கிறதா..? என்பதையும் ஆய்வு செய்து மேற்கண்டவற்றை முறையாக கடைபிடிக்காதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்