காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதய்யா…

0 207

இந்தபட்ஜெட்டிலாவது.. பணிநிரந்தரம் உத்தரவை எதிர்பார்க்கும் பகுதிநேர ஆசிரியர்கள்

பணிநிரந்தரம், காலமுறை சம்பளம் என்ற தங்களது வாழ்வாதார கோரிக்கையை பட்ஜெட்டில் அரசு நிறைவேற்ற வேண்டும் என ஒரு லட்சம் மனுக்களை அனுப்பி பகுதிநேர ஆசிரியர்கள்
கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கு கணினி, உடற்கல்வி, ஓவியம், இசை, தையல், தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல்திறன் ஆகிய கல்விஇணைச்செயல்பாடு பாடங்களை கற்றுத் தருவதற்கு கடந்த 2012-ம் ஆண்டு பள்ளிக்கல்வித்துறையால், அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தில் 16ஆயிரத்து 549 பகுதிநேர ஆசிரியர்கள் ரூபாய் 5ஆயிரம் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டார்கள்.

அவர்களில் இதுவரை 4ஆயிரம் பேர் பணியில் இருந்து விலகிவிட்ட நிலையில்,தற்போது சுமார் 12ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகிறார்கள்.

சம்பளம் உயர்வு முதலில் 2014-ம் ஆண்டு ரூபாய் 2ஆயிரம், அடுத்து 2017-ம் ஆண்டு ரூபாய் 700, கடைசியாக 2021-ம் ஆண்டு ரூபாய் 2300 என படிப்படியாக உயர்த்தியதால் ரூபாய் 10ஆயிரம் தொகுப்பூதியம் பெறுகின்றனர்.

முதல்வர் ஸ்டாலின், திமுக தேர்தல் வாக்குறுதி 181ல் கூறியபடி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என பட்ஜெட்டை எதிர்பார்த்து வருகிறார்கள்.

இது குறித்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் கூறியது:

கோரிக்கை வைத்தால் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை என் மீது மக்களுக்கு உள்ளது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மனுக்கள் என்பது வெறும் காகிதங்கள் அல்ல.

மனுக்களை நிறைவேற்றுவது நம் கடமை என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்த நம்பிக்கையில் திமுக தேர்தல் வாக்குறுதி 181-ன்படி பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்பதை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும் என தமிழகம் முழுவதும் இருந்து மனுக்களை அனுப்பி வருகின்றனர்.

வர உள்ள பட்ஜெட்டில் இந்த மனுக்களுக்கு முக்கியத்துவம் அளித்து முதல்வர் ஸ்டாலின் 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வார் என எதிர்பார்ப்போடு உள்ளார்கள்.

10 ஆண்டு பணி என்பதையும் கடந்து 12வது ஆண்டாக அரசு பள்ளிகளில் 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றோம்.

பெரும்பாலோர் 50வயதை கடந்து விட்டார்கள்.

நிரந்தரம் செய்தால் கூட சிலகாலம் தான் பணியாற்ற முடியும்.

ரூபாய் 10 ஆயிரம் என்ற குறைந்த சம்பளத்தில் பணி பாதுகாப்பு இல்லாமல் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றோம்.

திமுக 181வது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற முதல்வர் தான் ஆணையிட வேண்டும்.

இதை நினைவூட்டி தான் தினமும் மனுக்கள் அனுப்புகிறோம்.

பட்ஜெட்டில் பணி நிரந்தரம் கிடைக்கும் என்று முதல்வரை மலை போல் நம்புகிறோம்.

என்றனர் நம்பிக்கை தளராமல்!

எஸ்.செந்தில்குமார்

Leave A Reply

Your email address will not be published.