நன்நடை பயிலும்
ஞாயிறு நாள் வாழ்த்துக்கள்!
19.03.2023
குளிரும் பனியும்,
குவலயம் முழுதும்,
ஒளிரும் கதிரும்
உறவுக ளாகும்!
தளிரும் இலை கொடி
தாவரம் யாவும்,
மிளிரும் இயற்கை
மேன்மை இறையே!
ஒளிரும் வெப்பம்
உணவினை ஆக்கும்;
ஓயாப் பசுமை
உயிர் வளி நல்கும்!
அலைகடல் கடையும்
அரும்பெரும் காற்றும்
அடைமழை இடி மின்
ஆதவன் உடைத்தே!
கனை கடல் உயிரும்
கழனியின் விளைவும்
கனகச் சூரியன்
கனிந்த தன் கொடையே!
சுழன்று, நகர்ந்து,
சூட்சும விசையால்,
சுழலும் கோள்பல
சுற்றுது ஆதி!
உழலும் நம்மை
உயிர்த்திட வைக்கும்
உயிர்மை தந்திடும்
ஒண்கதிர் ஞாயிறு!
ஞாயிறு படைத்த
நாயகன் வாழ்த்தி,
ஞாலம் காத்தல்
நல்லோர் கடனே!
நன்மை தீமை
நம்செயல் தருமாம்;
நன்னெறி காத்தல்
நல்லறம் ஆகும்!
உறவுகள் காப்பது,
உயிர் துணை ஆகும்;
மறப்பதும் நன்று,
மகிழ்வுடன் ஒன்ற!
குவலயம்.. உலகம்
கடையும் கடலைச் சுழற்றிக் கலக்கும் காற்று
உயிர் வளி.. ஆக்ஸிஜன்
கனை கடல். குதிரை போல ஒலிக்கும் கடல்
ஆதி தினகரன்/ தினம் வரும் கதிரவன்!
ஒண்கதிர் ஒளிரும் கதிர்
ஞாலம்… உலகம்
முகவைத் தென்றல்
முகம்மது முஸ்தபா❤