எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்து…! பி.ஆர்.பி

0 119

மன்னார்குடியில் செய்தியாளர்களை சந்தித்த பி.ஆர் பாண்டியன்

வீராணம் நிலக்கரி திட்டத்திற்கு தடை சட்டமன்றத்தில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு விவசாயிகளின் போராட்டத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி, எடப்பாடி பழனிச்சாமிக்கு
பிஆர்.பாண்டியன் வாழ்த்துக்களை தெரிவித்தார்

தமிழ்நாட்டில் காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து கடந்த 2020 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு அரசாணை வெளியிட்டது. ‘

அதன் அடிப்படையில்
ஓ என் ஜி சி, வேதாந்தா, கிரேட் ஈஸ்டன் எனர்ஜி, உட்பட பல்வேறு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட ஹைட்ரோ கார்பன், பாறை எரிவாயு, நிலக்கரி,மீத்தேன், இயற்கை எரிவாயு கச்சா எண்ணை எடுப்பதற்கான பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு அனுமதி மறுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டது.

காவிரி டெல்டாவின் புகழ்மிக்க கடைமடை பாசன பகுதியாக விளங்குவது கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியாகும். மேட்டூர் அணைக்கு கீழே பாசனம் பெறும் வகையில் வீராணம் ஏரியில் புதிய அணை அமைக்கப்பட்டது. காவிரி டெல்டா பாசன பகுதிகளுக்கு உட்பட்ட பகுதியாக சிதம்பரம் பகுதி புகழ்மிக்க பகுதியாக விளங்குகிறது. காட்டுமன்னார்கோயில்,புவனகிரி, சிதம்பரம் தாலுகாக்கள் உட்பட்டிருக்கிற 2லட்சத்துக்கு மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்கள் முப்போகம் சாகுபடி செய்யப்படுகிறது.
5லட்சம் விவசாய குடும்பங்கள் வாழ்வாதாராமாக கொண்டு வாழ்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு மத்திய அரசு வீராணம் ஏரி நிலக்கரி சுரங்கம் திட்டம் அறிவித்து உள்ளது. இதற்கு ஜெயலலிதா தலைமையிலான அரசு ஆய்வு செய்வதற்கு அனுமதி வழங்க மறுத்துவிட்டது.

இந்நிலையில் காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் அறிவித்த பிறகு எந்த ஒரு பேரழிவு திட்டத்திற்கும் காவிரி டெல்டாவில் சட்டப்படி அனுமதி கிடையாது.

திமுக தலைமையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு கடந்த 2022 ஆம் ஆண்டு கடலூர் மாவட்ட ஆட்சியர் வீராணம் பாசன பகுதிகளில் கிணறுகள் அமைத்து நிலக்கரி சுரங்கம் குறித்த ஆய்வுகள் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனை அறிந்து விவசாயிகள் போராட்ட களத்தில் ஈடுபட்ட போது அதிகார வர்க்கம் காவல்துறையை வைத்து அச்சுறுத்தி மிரட்டி நிலங்களை கைப்பற்றி ஆய்வுக்கு ஒப்படைத்தது. பல இடங்களில் விவசாயிகள் மறுப்பு தெரிவித்ததால் சில அரசியல் கட்சித் தலைவர்கள் தனக்கு இருக்கிற அதிகாரத்தை பயன்படுத்தி தன் கட்சிக்காரர்களிடம் தவறான தகவலை சொல்லி நிலம் வாங்கி கொடுத்து கிணறு அமைப்பதற்கு அனுமதி வழங்கினார்கள்

இதனை எதிர்த்து போராடுவதற்கோ, கூட்டங்கள் நடத்துவதற்கோ காட்டுமன்னார்கோவிலில் அனுமதி கொடுக்கக் கூடாது என திருமண மண்டபங்கள் சமுதாயக்கூட உரிமையாளர்களுக்கு மிரட்டல் விடப்பட்டது.

இதனை அறிந்த தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் விவசாயிகளின் போராளி பி ஆர் பாண்டியன் அவர்கள் தலைமையில் அப்பகுதி விவசாயிகளை திரட்டி போராட்டத்தை அறிவிப்பதற்கான முயற்சி மேற்கொண்டோம். கூட்டம் நடத்துவதற்கான திருமண மண்டபங்கள் கொடுக்க உரிமையாளர்கள் அச்சப்பட்டார்கள்.

இந்த நிலையில் வீராணம் ஏரி கரையிலேயே விவசாயிகளின் போராளி
பிஆர் பாண்டியன் அவர்கள் தலைமையில் கடந்த 2023 ஜனவரி 2ஆம் தேதி வீராணம் நிலக்கரி திட்டத்திற்கு எதிரான போராட்டக் குழு அமைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஜனவரி 10ஆம் தேதி சென்னையில் இத்திட்டத்திற்கு எதிரான உண்ணாவிரத போராட்டத்தையும் அறிவித்தோம்.

தொடர்ந்து போராட்டக் குழுவின் சார்பில் கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் நிலக்கரி திட்டம் காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட மண்டலத்திற்கு எதிரானது. மாவட்ட நிர்வாகம் ஆய்வுக்கு கொடுத்திருக்கிற அனுமதி சட்டவிரோதம். இதனை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி கடிதம் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து கடலூர் மாவட்ட ஆட்சியர் சிதம்பரம் சப் கலெக்டர் தலைமையில் உடனடியாக சமாதான கூட்டத்தை ஜனவரி 7ஆம் தேதி நடத்தினார். கூட்டத்தில் நமது சங்கத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் உயர் மட்டக் குழு உறுப்பினர் சிதம்பர சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்று திட்டத்திற்கு எதிராக எழுத்துப்பூர்வமான கடிதத்தை கொடுத்து பாதுகாக்கப்பட்ட வேளாண் மன்டலத்தில் சட்டத்திற்கு புறம்பாக கொடுத்திருக்கிற அனுமதியை திரும்ப பெற வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சேத்தியாத்தோப்பு காவல் துணை கண்காணிப்பாளர் என்னிடம் (பிஆர்.பாண்டியன்) தொடர்பு கொண்டு சென்னையில் தாங்கள் அறிவித்துள்ள உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட வேண்டும். மாவட்ட ஆட்சியர் கொடுத்த உத்தரவை திரும்ப பெற்று விட்டார் என வாய்மொழியாக தொலைபேசி மூலமாகதெரிவித்தார்.இதனை ஏற்க மறுத்து மாவட்ட ஆட்சியர் கொடுத்த உத்தரவை திரும்ப பெற்று திட்டம் அமைவதற்கு தடை விதிக்க தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும். அதுவரையிலும் எங்கள் போராட்டம் தொடரும் என அறிவித்தேன்.

அறிவித்தபடி ஜனவரி 10ஆம் தேதி சென்னையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்ற மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் தமிழ்நாடு அரசு இத்திட்டத்தை கைவிடாவிட்டால் தீவிரமான போராட்டத்தில் களமிறங்குவோம் என எச்சரிக்கை விடுத்தோம். அதனை தொடர்ந்து வீராணம் பாசனப்பகுதியில் ஆய்வு பணியில் ஈடுபட்டிருந்த நிறுவனங்கள் கிராமங்களை விட்டு வெளியேற்றப்பட்டன.அடக்குமுறை கைவிடப்பட்டது.

தொடர்ந்து நேற்று (27.03.2023) சட்டமன்றத்தில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வீராணம் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டம் காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட மண்டலத்தின் கீழ் வருவதால் அதனை கைவிட்டுள்ளதாகவும்,நிரந்தர தடை வித்துள்ளதாக அறிவித்துள்ளதை வரவேற்கிறோம்.

இது தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு நடத்திய போராட்டத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக கருதுகிறோம். தொடர்ந்து இப்பகுதியை பாதுகாப்பதற்கு தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சமரசமின்றி தீவிரமான போராட்டங்களில் ஈடுபடும்.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் எந்த ஒரு பேரழிவு திட்டங்களையும் அனுமதிக்க முயற்சித்தால் அதனை எதிர்த்து முறியடிக்க தயங்க மாட்டோம் என எச்சரிக்கிறேன்.

அஇஅதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். விரைவில் நேரில் சந்தித்து வாழ்த்துவோம் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.