புதிய நிர்வாகியாக அன்சலோட்டி: திட்டவட்டமாக மறுக்கும் பிரேசில்
ரியோ டி ஜெனிரோ: பிரேசில் காற்பந்துக் குழுவின் புதிய பயிற்றுநராகச் செயல்பட ரியால் மட்ரிட் குழுவின் தற்போதைய நிர்வாகி கார்லோ அன்சலோட்டி (படம்) இணங்கியுள்ளதாக வெளியான தகவலை பிரேசில் காற்பந்துக் கூட்டமைப்பு அடியோடு மறுத்துள்ளது.
“புதிய நிர்வாகி யார் என்பது சரியான நேரத்தில் அறிவிக்கப்படும்,” என்று பிரேசில் தெரிவித்துள்ளது.
சென்ற ஆண்டு இறுதியில் கத்தாரில் நடந்த உலகக் கிண்ணக் காற்பந்துத் தொடரில் காலிறுதியில் குரோவேஷியாவிடம் பிரேசில் தோற்றுப்போனது.
அதனையடுத்து, அவ்வணியின் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து டிட்டே விலகினார்.
முன்னணி லீக் போட்டிகளில் நிர்வாகியாக 63 வயது அன்சலோட்டி பல வெற்றிகளைக் குவித்திருந்தாலும் அனைத்துலகப் போட்டிகளில் இவருக்கு அனுபவம் குறைவுதான். 1990களில் இத்தாலி அணியின் உதவிப் பயிற்றுநராக இவர் செயல்பட்டார்.
இந்நிலையில், பிரேசில் அணியின் பயிற்றுவிப்பாளராகத் தாம் பொறுப்பேற்கவிருப்பதாக வெளியான செய்தியில் உண்மை இல்லை என்று அன்சலோட்டியும் தெரிவித்திருக்கிறார்.