அனல் பறந்த இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம்; போட்டி முடிந்ததும் பாசமழை
கேப்டவுன்: தென்னாப்பிரிக்காவில் நடந்துவரும் மகளிருக்கான டி20 கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டியில் இந்திய அணி தன் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
ஆட்டத்தின்போது தீயாக விளையாடிய இரு அணி வீராங்கனைகளும் ஆட்டம் முடிந்த பிறகு கட்டி அணைத்தும் சிரித்துப் பேசியும் செல்ஃபி எடுத்தும் தங்கள் நட்பை வெளிப்படுத்தினர்.
இரு அணியினரும் ஒன்றாக சிரித்துப் பேசி மகிழும் காணொளிகளும் இணையத்தில் வெளியானது.
போட்டிக்குப் பிறகு வீராங்கனைகள் இயல்பாக இருப்பது புத்துணர்ச்சி தருவதாக இணையவாசிகள் குறிப்பிட்டனர்.
முதலில் பந்தடித்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 150 ஓட்டங்கள் எடுத்தது.
இலக்கை விரட்டிய இந்திய அணி 19 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றிபெற்றது.
ஆட்டமிழக்காமல் 53 ஓட்டங்களை விளாசிய ஜெமிமா ரோட்ரிகெஸ் ஆட்ட நாயகி விருதைக் கைப்பற்றினார்.