அஸ்வின் சுழலில் சரிந்த ஆஸ்திரேலியா

0 113

நாக்பூர்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.

நாக்பூரில் சென்ற வியாழக்கிழமை தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் பூவா தலையா வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்தடித்தது.

அந்த அணி முதல் இன்னிங்சில் 63.5 ஓவர்களில் 177 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

பிறகு முதல் இன்னிங்சைத் தொடங்கிய இந்திய அணி 2வது நாள் முடிவில் 114 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 321 ஓட்டங்கள் எடுத்தது. இந்திய அணிக்கு 3 விக்கெட்டுகள் மீதமிருந்த நிலையில் 144 ஓட்டங்கள் முன்னிலை பெற்றிருந்தது.

இன்று சனிக்கிழமை மூன்றாவது நாளும் இந்திய வீரர்கள் அதிரடி காட்ட, இந்திய அணி முதல் இன்னிங்சில் 400 ஓட்டங்கள் எடுத்து, 223 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது.

அதிக ஓட்டங்கள் பின்தங்கி இருந்ததால் நெருக்கடியான சூழலில் இந்தியப் பந்துவீச்சை எதிர்கொண்ட ஆஸ்திரேலிய அணி, அஸ்வின் சுழற்பந்துவீச்சில் மளமளவென விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது.

கவாஜா, வார்னர், ரென்ஷா, ஹேண்ட்ஸ்கோம்ப், அலெக்ஸ் கேரி ஆகியோர் அஸ்வின் பந்துவீச்சில் வீழ்ந்தார்கள். அஸ்வின் வீழ்த்திய ஐந்து விக்கெட்டுகளில் நான்கு எல்பிடபிள்யூ மூலம் வந்தன.

ஜடேஜா, ஷமி தலா இரண்டு விக்கெட்டுகளையும் அக்‌ஷர் பட்டேல் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இறுதியில், ஆஸ்திரேலிய அணி 32.3 ஓவர்களில் 91 ஓட்டங்களுக்கு எல்லா விக்கெட்டுகளையும் இழந்து, தோல்வியைத் தழுவியது.

ஆட்டநாயகனாக ரவீந்திர ஜடேஜா தேர்வானார்.

இரண்டாவது டெஸ்ட் போட்டி டெல்லியில் வரும் 17ஆம் தேதி தொடங்கவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.