தமிழில் தீர்ப்பு எழுதும் காலம் விரைவில் வரும்: நீதிபதி ராஜா
சென்னை: கீழமை நீதிமன்றங்களில் தமிழில் வாதாடி, தமிழில் தீர்ப்புரை பெறும் வழக்கம் உள்ளது. எனினும், இந்தப் பழக்கம் உயர் நீதிமன்றத்திலும் வர வேண்டும். தாய்மொழியிலேயே நீதி வழங்கி, தமிழிலே தீர்ப்புரை எழுதும் காலம் விரைவில் வரும் என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜா நம்பிக்கை தெரிவித்தார்.
சென்னை புதுப்பாக்கத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய அவர், “மாநில அளவில் தமிழில் மாதிரி நீதிமன்றப் போட்டிகள் தற்போதுதான் நடத்தப்படுகின்றன. இது மிகவும் ஆரோக்கியமான ஒன்று.
“தமிழுக்கு நாம் செய்யும் தொண்டு மட்டுமின்றி தமிழ் வளரவேண்டும் என்ற அடிப்படைக் காரணமும் உள்ளது. இம் முயற்சி வெற்றிபெறக் காரணம், இந்தியாவிலேயே முதல் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது தமிழ்தான்.
“உலகத்தின் பல்வேறு நாடுகளில் தாய்மொழியில்தான் நீதிமன்ற விவாதங்கள் நடைபெறுகின்றன. உலகத்தில் ஒரு வல்லரசு நாடாக ஜப்பான் உருவாவதற்கு காரணம், அந் நாட்டு மக்கள் சொந்த மொழியில்தான் பேசுகிறார்கள்.
“தாய்மொழியில் நாம் ஒரு விஷயத்தை நினைத்துப் பார்க்கும்போதும் யோசிக்கும்போதும் பிரச்சினை வருவது கிடையாது. அவ்வாறு வந்தாலும் சாதாரண முறையில் நம்மால் தீர்வு காணமுடியும்.
“நாமும் தமிழிலே வழக்காடி, தமிழிலேயே சிந்திப்போம். தமிழில் தீர்ப்புரை எழுதும் காலம் விரைவில் வரும். இதன் காரணமாக மேல் முறையீட்டு வழக்குகள் குறைந்து நீதிமன்றத்தின் சுமை குறையும்,” என்றார்.