திருமண ஆசை காட்டி பெண்களிடம் நகை, பணம் கொள்ளை
சென்னை: நீண்டநாள் திருமணம் ஆகாத பெண்களிடம் திருமண ஆசை காட்டி நகை, பணத்தைப் பறித்து வந்த ஆடவர் பிடிபட்டார்.
முகமது உபேஸ், 37, எனப்படும் அவர் வேலூர் காந்திநகரைச் சேர்ந்தவர். திருமணத் தகவல் மையம் ஒன்றில் பதிவு செய்து மாப்பிள்ளை தேடி வந்த புதுக்கோட்டை, ஆலங்குடியைச் சேர்ந்த ஓர் இளம்பெண்ணை உபேஸ் தொடர்புகொண்டார். திருமணத் தகவல் மையத்தில் புகைப்படத்தைப் பார்த்துப் பிடித்துப்போய்விட்டதாகவும் சந்திக்க ஆசைப்படுவதாகவும் அந்தப் பெண்ணிடம் உபேஸ் கூறியதைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் 13ஆம் தேதி சென்னை ராயப்பேட்டைக்கு அப்பெண் வந்தார்.
அவரைச் சந்தித்துப் பேசிய உபேஸ், தமக்கு அவசரமாகப் பணம் தேவைப்படுவதாகவும் நகையைக் கொடுத்தால் திரு
மணத்தின்போது திருப்பிக் கொடுத்துவிடுவதாகவும் கூறினார். அதனை நம்பிய இளம்பெண் 20 பவுன் நகைககளை அவரிடம் கொடுத்தார். அதன் பிறகு உபேஸை அந்தப் பெண்ணால் தொடர்புகொள்ள இயலவில்லை. தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், அண்ணாசாலை காவல் நிலையத்தில் உபேஸ் மீது புகார் கொடுத்தார்.
தனிப்படை அமைத்து தேடிவந்த காவல்துறையினர் ஈரோட்டில் உபேஸைக் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம் ஒன்றரைப் பவுன் நகைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
நீண்டநாள் திருமணம் ஆகாத பெண்களையும் விதவைகளையும் குறிவைத்து, அவர்களிடம் திருமண ஆசை காட்டி பல பெண்களை ஏமாற்றிய குற்றத்தை அந்த ஆடவர் ஒப்புக்கொண்டார்.